Wednesday, August 29, 2018

வெற்றியை நினைத்தே போராடு .
கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும்.
துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,
இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.
வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்
வசிப்பது என்பது மிகவும் அவசியம்.
நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.
வெற்றியை நினைத்தே போராடு .
கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும்.
துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,
இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.
வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்
வசிப்பது என்பது மிகவும் அவசியம்.
நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

Monday, February 3, 2014

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.-அருள்மிகு கொல்லங் கொண்டான்கரையடி காத்த ஐயனார் திருக்கோவில்

       அருள் மிகு கொல்லங் கொண்டான் கரையடி       காத்த ஐயனார் திருக்கோவில்.   

                 ஓம் பூதநாதாய வித்மஹே;  பாவ புத்ராய தீ மஹே;  
                  தன்னோ சாஸ்தா  பிரசோதயாத் !

                              சமஸ்தாப  தார  சர்வாஸ்ட   நாசக
                              சர்வா  பீஷ்ட  தாயக   சர்வ   மங்கள
                              ஸ்வரூபி பாண்டி மலையாளம் காசி
                              இராமேஸ்வரம்   அடக்கி   ஆளும்
                              ஸ்ரீ  பூரண   புஸ்கலாம்பாள்
                              சமேத அரிகரசுதன் ஆனந்த சித்தன்
                              என்  அய்யன் ஐயனாரப்பனே  சரணம் ;

தோற்றம் ; 

  ஆயிரம் வருடங்களுக்கு  முற்பட்ட மிகவும் பழமையான கோவில் .இது. ஸ்ரீவில்லிபுத்தூர்,வ. புதுப்பட்டி, கோபலாபுரம், மதுரை, நான்கு ஊர் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்.  60; 70 செங்குந்த நெசவாள குடும்பங்களுக்கு குலதெய்வம். பல வருடங்களுக்கு  முன்பு  பலத்த மழை பெய்தது அதில் கரை உடையும் நிலைக்கு வந்தது கிராமத்தை விட்டு தள்ளி இருப்பதால் கரை உடையும் நிலையில் இருப்பதை யாரும் அறியவில்லை அய்யனார் மனித உருவில் சென்று  கரை உடையபோகிறது என்று கிராம மக்களை அழைத்து வந்து மணல் மூட்டைகளை  போட்டு கரையை உடையாமல் காத்தபடியால்  ( இது போல் சமிபத்தில் சுமார் பதினைந்து  வருடங்களுக்கு முன்பும் நடந்துள்ளது ) கரையடி  காத்த அய்யனார் என்றும், கரையின் மூலை பகுதியில் இருப்பதாலும்; கரையின் மூலமான மதகுக்கு அருகில் இருப்பதாலும்  மூலகரை அய்யனார் என்றும் பூரணை,  புஷ்கலா  தேவியருடன் இருப்பதால், பூரணை , புஷ்கலை உடனுறை அய்யனார் கோவில்  என்றும்   வழங்கபடுகிறது.   

கோவில் அமைந்துள்ள இடம்; 

  இது ராஜபாளையம் தளவாய்புரம் சாலையில் இருந்து கூனங்குளம் , நக்கநேரி செல்லும் சாலையில் ஜாமீன் கொல்லங் கொண்டான் என்ற  கிராமத்திற்கு அருகில் உள்ள அயன்கொல்லங் கொண்டான் என்ற கிராமத்திற்கு மிக அருகில் உள்ள கண்மாய் கரையில் இந்த கோவில் உள்ளது.
இந்த கண்மாய் கரை ராஜபாளையம், செங்கோட்டை நெடுஞ்சாலையில், தளவாய்புரம் செல்லும் சாலை பிரியும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே ஆரம்பித்து சிறிது கிழக்காக வளைந்து சுமார் ஐந்து ஆறு கிலோ மீட்டர் சென்று ,சிறிது மேற்காக திரும்பிய பின்  ஒரு இருபது அடி  தூரத்தில் இந்த கோவில் உள்ளது . அயன் கொல்லங் கொண்டான் என்ற கிராமத்தின் பெயரில் அயன் என்ற வார்த்தை அருகில் உள்ள அய்யனார்  கோவிலை குறிப்பதாக தெரிகிறது .

கோவிலின் அமைப்பு ;


இந்த கோவில் சுமார் 67 அடி நீளமும் 33 அடி அகலத்துடன் கூடிய  10அடி உயர சுற்று சுவருடன், முன்பகுதியில் 30 அடி அகலத்துடன் ஒரு மூன்றடி உயர திண்ணை உள்ளது . திண்ணைக்கு அருகில் வடக்கு பக்கமாக, கோவிலின் ஸ்தல விருட்சம் போல் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது


 [ திருப்பணி நடைபெறும் போது இரண்டு முன்று கிளைகளை வெட்டவேண்டி வந்தது சற்று சிறிதாக உள்ளது .] திண்ணையில் படிகள் ஏறி  உள்ளே நுழைந்ததும் வடபுறத்தில்
  ஸ்ரீ சங்கரேஸ்வரி என்ற குழந்தை தெய்வத்தின் பீடம் உள்ளது ,அதற்கு சற்று பின்புறம் சுவற்றை ஒட்டி ஸ்ரீ நல்லசிவம்  என்ற தெய்வத்தின்  பீடமும் ,அடுத்து ஸ்ரீ சின்னகருப்பசாமி பீடமும், அருகில் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி பீடமும்  அருகில் ஸ்ரீஅக்கினி வீரபத்திரன் பீடமும் அடுத்து ஸ்ரீ கம்பளத்தார் பீடமும், ஸ்ரீ குருநாதர் பீடமும் அதன் அருகில் கீழ்
திசை பார்த்தாற் போல் ஸ்ரீசன்னாசி    பீடமும் உள்ளது, அதிலிருந்து ஒரு நான்கு அடி தூரத்தில் ஐந்துக்கு ஐந்து சதுரத்தில்  நான்கு அடி உயரத்தில் கற்களிலான   பீடத்தில், பூரணை, புஷ்கலை உடனுறை   ஸ்ரீ அய்யனார்  சிறிய  கற்சிலை உள்ளது.  எதிரில்.அதேபோல் ஒரு சிறிய பீடத்தில் குதிரை யானை நாகர் சிலை களும் உள்ளது .[ பொதுவாக அய்யனார் கோவில் என்றால் பெரிய அய்யனார் சிலையும் பெரிய குதிரை சிலையும் நம் கண் முன்னே  வரும் ஆனால், இந்த கோவிலில் அப்படி இல்லை .அதேபோல் இங்கு ஆடு கோழி பலியிடுவது இல்லை   சுத்த சைவ கோவில் ] அய்யனார்  பீடத்தை அடுத்து  ஸ்ரீ
கோவிந்தன் பீடமும் அடுத்து சுவரை ஒட்டி வடக்கே பார்த்த மாதிரி ஸ்ரீ இருளப்ப சுவாமி பீடமும் அடுத்து மாரியம்மன் பீடமும் அடுத்து ஸ்ரீ  ரண காளி பீடமும் அடுத்து ஸ்ரீ பேச்சியம்மன் பீடமும் அடுத்து ஸ்ரீ ராக்காச்சியம்மன் பீடமும் அடுத்து ஸ்ரீசப்தகன்னிமார்கள் பீடமும் உள்ளது. அடுத்து சுவற்றில் இருந்து ஆரம்பித்து கோவிலின் மத்தி வரை ஒரு பாறை உள்ளது .அதை அடுத்தாற்போல் காவல் தெய்வமான
ஸ்ரீ சின்னத்தம்பி பீடமும் உள்ளது.

என்னுடைய சிறிய வயதில் இந்த கோவில் இரண்டு அடி உயர  சுற்று சுவருடன் சிரிய சிமண்ட்டிலனா பீடத்தில் அய்யனார் சிலை இருந்தது


                                      இரண்டு அடி சுவராக இருந்த போது
சிறிய பீடத்தில் அய்யனார் 

                     
           28-10-2000-வருடத்தில் திரு ராசையா  அவர்களால் தினத்தந்தியில் எழுதப்பட்ட பதிவு .           
  என்னுடைய சிறியவயதில் இந்த கோவில் இரண்டு அடிஉயர  சுற்று சுவருடன் சிறிய சிமண்ட்டிலானா பீடத்தில் அய்யனார் சிலை இருந்தது .அதன்பின் சிறிது சிறிதாக வரி போட்டு, இன்று பத்தடி உயர சுற்று சுவருடன், நான்கு அடி உயர கற்களினால் பீடத்தில் இருக்கிறது .இந்த அளவிற்கு உருவாக்கவே எங்களுக்கு இவ்வளவு நாள் ஆகியுள்ளது எனெனில் பத்து, பன்னிரண்டு குடும்பங்களை தவிர  மற்றவர்கள் மிகவும் பின்தங்கிய நெசவாளர் குடும்பங்கள். .இப்போது எங்களில் ஓன்று, இரண்டு குடும்பங்களின் வாரிசுகள் நல்ல படிப்பு படித்து நல்ல வேலையில் இருப்பதால், அந்த இளம் தலைமுறையினர் கொடுத்த நன்கொடை மற்றும் பத்து வருடங்களாக வசுலிக்கப்பட்ட கட்டிட வரி [500ரூபாய் ] ஆகியவற்றின் மூலம் வந்த நிதியை வைத்து மேல் தளமும் கீழ் தளமும்  போட முடிவெடுத்து,  சென்ட்ரிங் போடுபவரை அணுகிய போது, மேல் சென்ட்ரிங்   போடுவதற்கே  நிதி பத்தாது என்று தெரிய வந்தது, சரி தகரத்தில் மேல் கூரை போட்டு தரை  தளம் அமைக்கலாம்,

போதாதற்கு நன்கொடை வசூல் செய்யலாம் என்று முடிவெடுத்து .திருப்பணியும்  நடை பெற்றது .நன்கொடை வசுலும் செய்யப்பட்டது, இருந்தாலும் மேல் கூரை அமைக்க மட்டுமே முடிந்தது தரை தளம் அமைக்க முடியவில்லை .இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த நிதி பத்தாது என்பதால் கணபதி ஹோமம் செய்ய முடிவு செய்து 20-1-2014ம் நாள் திங்கள் கிழமை [தை 7ம் தேதி ] நடைபெறுகிறது .

கோவிலில் நடை பெறும் பூஜை ;

 இந்தகோவிலில்   வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த கோவிலில் பூஜை நடைபெறுகிறது.அதேபோல் இந்தகோவிலில் பரம்பரை பரம்பரையாக ,  பூசாரியாக ஒரே குடும்பத்திலுள்ள வாரிசு தேர்ந்தேடுக்கபடுகிறார்.
       தற்போது பூசாரியாக இருப்பவர்  தி.ராஜேந்திரன் அவர்கள்.ph .9443861571.

வருடாவருடம்  மஹாசிவராத்திரி  அன்று ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, புதுப்பட்டி, கோபலாபுரம், மற்றும் ராஜபாளையம் ஊர்களில் இருந்து எங்கள் எல்லா  சொந்தமும் கோவிலுக்கு வருவார்கள் .இரவில் தான் பூஜைக்கான வேலை ஆரம்பம் ஆகும் முதலில்  அய்யனாருக்கு   பால் நெய் தயிர்  மற்றும்  சகலவிதமான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும் அடுத்து அலங்கார பூஜை நடைபெரும்.அடுத்து ஒருசிலருக்கு சாமி வரும் அப்படி சாமி ஆடும்மருளாடிகள்நாக்கில் கற்பூரத்தை  ஏற்றுவர்.  அது அவருடை வாய்க்குள் நாக்கில் எரியும் போது தீயானது  கூம்பு போன்ற வடிவில் அவருடைய அன்னத்தை தொட்டும், புகையானது வாய் வழியாக வரும் .அத்தோடு  கன்னங்களின் வழியாக சிவப்பாக வெளிச்சம் தெரியும் பார்ப்பதற்கு  பயத்தையும் ,பக்தியையும் வரவழைப்பதாக இருக்கும்  .இந்த நிகழ்வு வேறு எந்த கோவிலிலும் நடை பெறாத ஒரு நிகழ்வு;. சின்னத்தம்பி என்ற தெய்வமான காவல் தெய்வத்தின்  மருளாடி , சிறிது கட்டையான மாநிறம் உடையவர் அவர் அடும் போது , கண்களை விரிய திறந்து முழிகளை உருட்டி, ஒரு காலை முட்டிபோட்டு மறுகாலை சிறிது முன் முன்புறமாக பாதத்தை ஊன்றி, கையில் உள்ள அரிவாளை தரையில் ஊன்றி மறுகையில் வள்ளயகம்பை பிடித்தபடி குரல் கொடுத்தபடி ஆடுவது சின்னத்தம்பி நேரில் வந்தால் இப்படித்தான் இருக்குமோ என்று சொல்லும்படி இருக்கும்.அப்படி உக்கார்ந்த நிலையில் பார்க்க சிறுவர்கள் பயந்தே விடுவார்கள் . சில சமயம் அவர் கோவிலை விட்டு வெளியே சென்று பாம்பை கையில் பிடித்து வருவதும் உண்டு. சிறிது நேரத்தில்  புதிதாக வாங்கிய மண் பானையுடன் அருகில் உள்ள நீரோடையில் சென்று ,அந்த பானை சுத்தம் செய்யப்பட்டு நீர் நிரப்பி மாவிலை மற்றும் வேப்பிலை வைத்து அதன் நடுவில் தேங்காய் வைக்கப்பட்டு இலைகளை சேர்த்து கூம்பு போன்ற வடிவில் பூவினால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடைபெறும்.  அலங்கரிக்கப்பட்ட கிரகத்தை இருளப்பசாமி ஆடுபவர்  தலையில் வைத்து எடுத்து வந்து இருளப்பசாமி பீடத்துக்கு அருகில் உள்ள பீடத்தில் வைக்கப்படும் [எல்லா தெய்வங்களும் இப்போது முதல் இந்த கிரகத்தில் இருந்து  இங்க உள்ள  எல்லா மக்களை காக்க வேண்டும் என்பது ஒரு ஐதீகம்]   அடுத்து வந்தவர்கள் எல்லோருக்கும்  அன்னதானம் வழங்கப்படும் .அடுத்து  எல்லா பீடத்திலும்அவித்த தட்டை பயறு, தேங்காய், பழம் கரும்பு ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படும் .இத்துடன் அன்றைய பூஜை முடிவடையும்.
                     மறுநாள் . காலை எழுந்து ஒரு சிலரை தவிர எல்லோரும் கிளம்பி தளவாய்புரத்திற்கு பழங்கதைகளை பற்றி பேசிக்கொண்டும்,  முறமை காரர்களை கிண்டல் கேலி செய்து கொண்டு முதல்நாள்  படைத்த தட்டை பயறை சாப்பிட்டுக் கொண்டு  நடந்தே செல்வோம். .தளவாய்புரத்தில் உணவகங்களில், காலை உணவை முடித்துக் கொண்டு கோவிலுக்கு வரும் வழியில், காலை கடன்களை முடித்து; பம்ப்செட்டுகளில் ஒருவருக்கு ஒருவர் தண்ணீரை தெளித்து விளையாடி கொண்டும் குளிப்போம், நீந்த தெரிந்தவர்கள் கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து குளிப்பதும் உண்டு இவ்வாறு சந்தோஷமாக குளித்துவிட்டு கோவிலுக்கு வருவார்கள்.(இந்த நிகழ்வு என்னுடைய சிறுவயதில் நடந்தது) இப்போது கோவிலேயே உணவு வழங்குவதால் தளவாய்புரம் செல்வது குறைவு . முடிக்காணிக்கை செலுத்துவோர் ,காது குத்துவோர்  ஆலமரத்தின்   அடியில் அமர்ந்து காணிக்கைகளை செலுத்துவார்கள் .பதினொன்று பனிரண்டு மணி வாக்கில் முதல் நாள் போல் இன்றும் பால் தயிர் நெய் மற்றும் சகலவிதமான வாசனை திரவியங்கள்  கொண்டு அபிஷேகம்  நடைபெறும். அடுத்து அலங்கார பூஜை நடைபெறும். பின்பு அய்யனாருக்கு எதிரில் ஒரே பெரிய பானையில் பொங்கல் வைக்கப்படும்.

பின்பு பொங்கல் கரும்பு தேங்காய் பழம் வைத்து பூஜை நடைபெறும்.அடுத்து வந்தவர்கள் அனைவருக்கும் அன்னதானம்  நடைபெறும் .இவை முடிய இரவு எட்டு ,ஒன்பது மணி ஆகிவிடும் சில நேரங்களில் பத்து பதினொன்றுக்கு மேல் ஆவதும் உண்டு .  [ என் சிறு வயதில் இரவே அலங்காரம் கலைத்து கிரகத்தை எடுத்து நீரோடைக்கு கொண்டு வந்து அதற்கு பூஜை செய்து அதை கலைத்து விட்டு பூவுடன் சேர்த்து தண்ணீர் , கோவிலின் உள்ளே தெளித்துவிட்டு மக்கள் மீதும் தெளித்து விடுவார்கள் இதையே பூந்தண்ணி கொடுத்தல் எனப்படும் பூந்தண்ணி  தெளித்தவுடன்  அப்படியே கரை வழியாக நடந்து செங்கோட்டை ராஜபாளையம் சாலைக்கு வந்து ராஜபாளயத்திற்க்கு அருகில் இளந்தோப்பில்  தங்குவார்கள்..மறுநாள் காலையில் பொதுவில் படைக்க ப்பட்ட பிரஷாதங்களை  வரி செலுத்திய அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுத்துவிட்டு அய்யனாரின் அருளோடு சொந்தபந்தங்களை பார்த்த சந்தோஷத்தோடு வீடு திரும்புவோம் எம் மக்கள் இந்த சந்தோஷத்திற்க்காகவே  எங்கிருந்தாலும்  இந்த மூன்று நாளை தவற விடுவதே இல்லை]  , இப்போது தங்குவதற்கு இடம் இல்லை என்பதாலும் இரவில் குழந்தை குட்டிகளை அழைத்துக்கு கொண்டு பயணிப்பது சிரமமாக உள்ளதாலும் ,இரவு கோவிலில் தங்கி மறுநாள் காலை பூந்தண்ணி  கொடுத்து கிளம்புவோம், சிறிது தூரம் நடந்து வந்து பின் பேருந்து அல்லது வண்டி கார் போன்றவற்றில் ஏறி ராஜபாளையத்தில் மாரியம்மன் கோவிலுக்கு வந்து விடுவார்கள் அங்கு பிரசாதம் பிரித்து அய்யனின் அருள் பெற்ற நிறைவோடு சொந்த பந்தங்களை பார்த்த  சந்தோஷத்தோடு வீடு திரும்புவோம் .இதோடு அடுத்த வருடம்தான் இந்த் சந்தோஷம் கிட்டும் .

கோவிலின் சிறப்பு ;

1, இந்தகோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் வைக்கப்படுகிறது அதுவும் எல்லோருக்கும் பொதுவாக  பொது  பானையாக   
ஒரே பானையில் மட்டுமே வைக்கப்படுகிறது. தனியாக யாரும் வைப்பதும்  இல்லை.
2; இந்தகோவிலில் முடி எடுப்பதும் வருடத்தில் ஒருமுறை சிவராத்திரிக்கு மறுநாள் மட்டுமே வேறு எப்போதும் கிடையாது.
 3, இந்த கோவிலில்மருளாடிகள்  நாக்கில் கற்பூரம் ஏற்றுவது சிறப்பு .வேறு கோவில்களில் இல்லாத நிகழ்வு .

காலங் காலமாய் வந்த வாய்மொழி செய்திகள்;

 1,அதாவது எங்கள் கோவிலுக்கு அருகில் தென்புரத்தில் அங்கள பரமேஸ்வரி கோவில் உள்ளது சுமார் ஆறனுற்று ஐம்பது வருடங்களுக்கு  முன்பு  ஸ்தாபிக்கப்பட்டது .இந்த அம்மன் இவர்களுடன் தங்கி கொள்ள அனுமதி   கேட்க  அய்யனார் எதிர்கரையில் அமர்ந்து அங்கு வரும் மக்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்குமாறு  பணித்ததாக இந்த கோவிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது .எழுத்தாளர் கொல்லங் கொண்டான் ராசையா  அவர்கள் இது பற்றி ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார் .
2, சப்பாணி முத்தையா என்ற தெய்வம் ஒரு விளையாட்டு பிரியர் ,அவர் ஒருமுறைவிளையாட வெளியில் செல்ல அனுமதி கேட்க;அய்யன்  விடியுமுன் இங்கு வந்த விடவேண்டும் என்று சொல்லி அனுமதிக்க, ஆனால்விடியுமுன் வரமுடியாதலல் அம்மன் கோவிலிலேயே தங்கி விடுகிறார் .இப்போதும் அந்த தெய்வம் அங்கு உள்ளது .
  3, சேத்தூர் என்ற ஊரில் ஒரு அய்யனார் கோவில் உள்ளது .அந்த கோவில், இந்த கோவிலின் பிடிமண் எடுத்து உருவாக்கப்பட்டதாக அந்த கோவிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது .

 அய்யனின் மகிமை ;

          மக்களுக்கு ஆற்றிய அற்புதங்கள் நிறையவே உள்ளது அதில் இரண்டு மற்றும் சமீபத்தில் நடந்தது .அருகில் உள்ள வயல்களில் வேலைக்கு கிராமத்து மக்கள் கோவிலின் அருகில் உள்ள ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து உணவு உண்பதும் இளைப்பாருவதும், வழக்கம் .அதுபோல் இளைப்பாறும் போது ஒரு சகோதரியின் தங்க செயின் காணவில்லை அங்கு தேடிப்பார்த்தும் கிடைக்காமல் போக அந்த சகோதரி வருத்தத்துடன் வீட்டிற்க்கு சென்றுவிட அன்று இரவு கணவில் அய்யனார் தோன்றி செயின் கிடக்கும் இடத்தை கூறி மறைய, மறுநாள் அய்யனார் கூறிய இடத்தில் செயின் கிடந்து எடுத்து நன்றி தெரிவித்துள்ளார் .இது போன்று பல அற்புதங்கள் நடந்துள்ளாதால் அந்த  கிராமத்து மக்களிடம் பயமும் பக்தியும் அதிகம். மழை பொழிவு இல்லாத காலங்களில் மழை வேண்டி பூஜைகள் நடத்துவதும் உண்டு 

             மக்களுக்கு உதவி செய்வதுடன் தண்டிக்க வேண்டியதில் தவறியதும் இல்லை ஒருமுறை கோவிலுக்கு சென்ற நேரத்தில் என்னுடைய தாத்தா  திடீ ரென்று நாக்கு வெளியே தள்ளி உணர்வின்றி கிழே விழுந்துவிட தண்ணீர் தெளித்தும் எழவில்லை எனவே  வந்தவர்கள் அனைவரும் வருத்தத்துடன் தவிக்க, சாமி ஆடுபவர் மீது சாமிவருத்தி, சாமி வந்ததும்,  இவன் பேச்சில் தவறு செய்துவிட்டான்  அதனால் தண்டித்து விட்டாதாக கூற, எல்லோரும் காலில் விழுந்து மன்னிக்குமாறு கூற, வேண்டுதலுக்கு இறங்கி, சாமி ஆடுபவர் தனது நாக்கில் தன் கையில் உள்ள அறிவாளால் கொத்தி வந்த ரத்தத்துளிகள்.எங்க தாத்தா  மீது தெளிக்க, ரத்தத் துளிகள் முகத்தில் பட்டவுடன் அவருக்கு சுய உணர்வு வந்தது.எல்லோருக்கும் மிகவும் சந்தோசம் ஏற்பட்டது .சாமி ஆடுபவர் அறிவாளால் கொத்திய இடத்தில் உள்ள காயத்திற்கு  திருநீறு மட்டுமே மருந்தாக போடப்பட்டது .  

Wednesday, March 27, 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்- ஸ்ரீவில்லிபுத்தூரில்

இன்று ஸ்ரீ ஆண்டாள் திருமணம் நடக்கிறது .கோதை ஆண்டாள் பிறந்த,வளர்ந்த, தவழ்ந்த,விளையாடிய ,இந்த மண்ணில் பிறந்ததே நாம்செய்த புண்ணியம் .இந்தமண்ணில் நடக்கும் பொது அந்த அம்மையின் காலடி பட்ட துசியது என்மீது படாத என்று ஏங்கியது உண்டு அப்படிப்பட்ட அந்த அம்மையின் திருமணம் இன்று நடக்கிறது .அந்த அம்மா தன்திருமணம் எப்படி நடக்கவேண்டும்  என்பதைஅந்த காலத்தில் பாடலாக எழுதியுள்ளார் அதான் ஒருபகுதியை பார்ப்போம் .
 1.வாரணமாயிரம் சூழ வலம்செய்து ,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரணபொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நட்டக் கனாக்கண்டேன் தோழி நான்.
  கொஞ்ச காலம் முன் வரை கூ டமாப்பிள்ளை அழைப்பில் கோவில் யானை
ஊர்வலத்தில் முன்னே செல்ல வைக்கும் பழக்கம்இருந்தது சாட்சாத் மஹா விஷ்ணுவே மாப்பிளையனால் ஒரு யானை போதுமா என்ன ?வாரணம் ஆயிரம் சூழ மாப்பிளை ஊர்வலம் வந்தாராம் நம்பி என்றல் ஆடவரில் சிறந்தவர் என்றுஅர்த்தம் அவன் வரும்போது எதிரே பூரண பொற் கலசங்கள்வைத்து வாயிற் புறமெங்கும் தோரணங்கள் கட்டப் பெற்றிருப்பதைக் கண்டேன் என்கிறாள் கோதை ஆண்டாள் .

2. நாளை வதுவை மணமென்று நாளிட்டு ,
பாளை கழுகுபரிசுடைப் பந்தற்கிழ்,
 கோளரி மாதவன் கோவிந்தனேன்டான் ,ஓர்
காளைபுகுதக்  கனாக்கண்டேன் தோழி நான்

 இது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது தென்னம் பாளையும் பாக்கு கொத்துகள் கட்டப்பட்ட பந்தலில் சிங்கம் போன்று மாதவன் மறுநாள் கல்யாணம் என்று வந்தாராம்

3இந்திரனுள்ளிட்ட தேவர் சூழா மெல்லாம் ,
வந்திருந்த்தென்னை  மகட் பேசி மந்திரித்து ,
மந்திர்க்கோடியுடுத்தி மணமாலை ,
அந்தரி சூட்டக்  கனாக்கண்டேன் தோழி நான்.

திருமாலின் ஊரவினர்கள் இந்திரன் உள்ளிட்ட தேவர் கூட்டம்வந்திருக்க தங்கை பார்வதி சூட்டிவிட்டாள்என்கிறாள் கோதை .

தொடரும் ;
  •   

.
  1.   
 .


Saturday, December 22, 2012

அண்ணா களஞ்சியம்


இனம்பகுதி: 1
பகுதி: 1 2 3 4
» தமிழனுக்கு தமிழ் நாட்டிலே தமிழரின் பணத்தால் கட்டி தமிழரின் பணத்தால் பராமரிக்கப்படும் கோயில்களிலே தமிழருக்குச் சம உரிமை இல்லை; உண்டிச்சாலைகளிலேயும் இல்லை. தமிழ்நாட்டிலே தமிழனுக்கு வேலை கிடைப்பதில்லை.
(தமிழரின் மறுமலர்ச்சி)
» கனியிருக்கக் காயும், கரும்பிருக்க இரும்பும், விளக்கிருக்க மின் மினியும், வேண்டுவரோ விவேகிகள்? தமிழ் இருக்க, தமிழர் நெறி இருக்க, தருக்கு மிக்க ஆரியமேன் எமக்கு! கிளியும், குயிலும், மாடப்புறாவும், மைனாவும் ஒரே சோலையிலே உல்லாசமாக வாழும். ஆனால் வல்லூறு வட்டமிடக் கண்டால் அதுவும் நம்மைப் போல் ஒரு பட்சிதானே என்று அவை கருதா; வட்டமிடும் வல்லூறு தம்மை வதைக்கும் என்பதறிந்து! அதுபோலவே திராவிடப் பெருங்குடிமக்கள் தம்மில் சிற்சில வேறுபாடுகள் கொண்டவராக இருப்பினும், ஒரே வட்டாரத்தில் வாழ இசைவர். ஆனால் தமது சுயமரியாதையைச் சூரையாடும் ஆரியருடன் தோழமை பூண்டு வாழ இசையார்.
(கட்டுரை - சீறும் சில்லரைகள் - 28.06.1942)

» இராமாயணம் வைணவருக்கு மேலான நூல். பெரிய புராணம் சிவனடியார்களின் பக்தியை விளக்கும் நூல். சைவம், வைணவம் எனும் இரு மார்க்கங்களையும், பெரியபுராணம், கம்ப இராமயணமாகிய இரு நூற்களையும், தமது மார்க்க நூற்களாகக் கொள்கின்றனர். வைணவம், சைவம் எனும் இரண்டும் இந்து மார்க்கத்தின் கிளைகள். தமிழர் இந்துக்களல்லர்; தமிழருக்கு தனி நெறி உண்டு என்றாலும் இவ்விரு மார்க்கங்களையும் தழுவிக்கொண்டு, தமிழர் தன்மை இந்துக்கள் என்று கருதி வருகின்றனர். நெறியைவிட்டு, ஆரிய நெறியாகிய இந்து மார்க்கத்தைக்கொண்டு தம்மை இந்துக்கள் என்று கருதிக்கொள்வதால், தமிழர், தாங்கள் தனி இனம் என்பதை மறந்து இந்துக்களில் ஒரு பகுதி என்ற எண்ண, தன் மானத்தையும் தன்னரசையும் இழந்தனர்.
(14.03.1943 - தீ பரவட்டும்)

» தஞ்சை மாவட்டத்திலே, சாம்பசிவ ஐயர், சாமியப்பா முதலியார், ஆரியர், திராவிடர் என்று நாம் நினைக்கிறோம். ஒருவரை காங்கிரஸ் என்றும், மற்றவரை ஜஸ்டிஸ் என்றும் சொல்கிறோம். அவரவர்களுக்கு வேறு வேறு கொடியிருப்பதாக நாம் எண்ணுகிறோம். பெருமையுடன் பேசிக்கொள்கிறோம். குத்தகைத் தகராறு, வாரத் தகராறு, இவைகளின் காரணமாக விவசாயிகளின் கிளர்ச்சி நடக்கும்போது என்ன காண்கிறோம். ஆரிய சாம்பசிவ ஐயரும், திராவிடச் சாமியப்பாவும் காங்கிரஸ் மந்திரி பாஷ்யம் ஐயங்காருடன் பேசி, திராவிட கந்த சாமியின் கொட்டம் ஒழிக்கப்படவேண்டும், என்று மந்திராலோசனை செய்கிற வேடிக்கையை. வேடிக்கை அல்ல அது? வேதனை?
» தமிழர்களுக்கு ஜாதியும் கிடையாது. ஜ வும் கிடையாது. தமிழிலே ஜாதி என்ற ஏற்பாடு தமிழகத்திலே கிடையாது. நீ குறிப்பிடும் உனது முன்னோர்களாகிய தபசிகளும், ரிஷிகளும் தவம் செய்வதையும், காம குரோத மத மாச்சரியாதிசிகளை அடக்குவதிலும் காலந்தள்ளாது, தமிழ் இனத்தைக் கெடுக்கும் திருத்தொண்டு புரியவேண்டியே வர்ணாஸ்ரமத்தை புகுத்தினர். வகை கெட்ட மன்னர்கள் வளைவுகளுக்கு ஆசைப்பட்ட (வளைவுகள் என்றால் விபரீத அர்த்தம் செய்யவேண்டார். ஆரியர், மன்னர்கள் எதிரிலே வளைந்து நின்று ஏய்த்தனரே அதனைத்தான் குறிப்பிடுகிறேன்) அந்த வர்ணாஸ்ரமத்திற்கு இடம் அளித்தனர். அதனால் இடர்பட்ட தமிழர் இன்று அதனை அடித்து விரட்டுகின்றனர்.
(கட்டுரை - மட்டரகம் - 28.11.1943)

பகுத்தறிவு
» போர்க்கருவிகள் விஞ்ஞான முறையிலே என்பதற்காக, விஞ்ஞானத்தை தூஷிப்பபது கோட்டைக்கு உபயோகிக்க வேண்டிய கருங்கல்லின் மீது, மண்டையிணை மோதவைத்துக்கொண்டு கருங்கல்லின் கொடூரத்தைக் கூறி கோவென கதறும் கோணல் புத்திக்காரன் செயல் போன்றதாகும். விஞ்ஞானம் பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருக்குமே ஒழிய, அவைகளை உபயோகிக்கும் மக்களின் மனப்போக்குக்கு, அது ஜவாப்தாரியல்ல! வீணையின் நரம்புகள், நாதத்தைத் தரும் இசை வாணனின் மிருதுவான கரத்திலே. விஷயமறியாதவனுக்கு தூக்குக்கயிறுக்கும் அது உபயோகமாகக் கூடும். குற்றம் வீணையினுடையதல்ல. அந்த வீணனுடையது. வீணை உயிர் குடிக்கும் விபரீதப் பொருள் என்ற விளம்புவது போன்றது விஞ்ஞானத்தை குறை கூறுவது.
(கட்டுரை - விஞ்ஞானம் விடுதலை வீரன் - 09.01.1944)

» ஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த மனிதனிடத்தில் அடங்குவதில் ஆச்சர்யமில்லை . ஆனால் ஆறறிவு படைத்தத் தமிழன், அதைப் போலவே ஆறறிவு படைத்த ஆரியனிடம் அடங்கிக் கிடப்பது அதிசயமாக இருக்கிறதென்று, அன்பர் ஒருவர் கூறினார். ஆனால் ஆரியனுக்கு ஏழாம் அறிவு என்று ஒன்றிருக்கிறது. அதுதான் பிறரை ஏய்த்துப் பிழைக்கும் அறிவு. இப்படி அடங்கிக் கிடக்கும் தமிழன் தரணி ஆண்டவன் என்றும், ஆற்றல் மிகுந்தவனென்றும் அந்த நாள் வரலாறு அறிவிக்கிறது. இமயத்தில் வெற்றிக் கொடி நாட்டியத் தமிழன் என்று சொல்லப்பட்டவன், இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதா? என்று ரோமாபுரிவரை வாணிபம் நடத்திய தமிழன்இன்று வாழ வழியின்றி திகைப்பதா என்பதுதான் இன்று நாங்கள் உங்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்வது. ஆகவேதான் பார்பனீயம் என்ற பழைய ஏற்பாடு, பாராண்ட தமிழர்களைக் கோழையாக்கிற்று என்று கூறுகிறோம். இந்தப் பார்பனீயம் அழிக்கப்பட்டாகவேண்டும்.
(01.07.1945 - பொழிவு - மறுமலர்ச்சி - சிதம்பரம்)

ஆரியர் - திராவிடர்
சிலர் கேட்கலாம், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று பலப்பல பேசுகிறீர். திராவிடத்திலே கூடப் பள்ளர், பறையர் என்றும், முதலியார், நாயுடு என்றும், சைவர், வைணவர் வேளாளர் என்றும் பல பிரிவுகள் உள்ளனவே. இது உங்கள் கண்களில் உறுத்தவில்லையா? வீணே ஆரியத்தை மட்டும் ஏன் தூற்றுகிறீர் என்று ஒப்பாரி வைக்கலாம். நான் கூறுகிறேன் அத்தகையத் தோழர்களுக்கு. ஆரியத்தின் அக்ரமச் செயலால் உண்டான பிழைகள் இவை. வேறுபாடுகள் இவை. திராவிடத்திலே உள்ள வேறுபாடுகளை நீக்கிக்கொள்ள முடியும். ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையே அளவற்ற முரண்பாடுகள் உள்ளன. வேறுபாட்டை நீக்கிக் கொள்ளமுடியும். ஆனால் முரண்பாடு நீக்க முடியாது. சான்றாக திராவிடத்திலுள்ள வேறுபாடு தண்ணீருக்கும் பன்னீருக்கும் ஒத்தது. தண்ணீரோடு பன்னீரைச் கலக்கலாம். கெடுதியில்லை. தண்ணீரும் பன்னீரின் மணத்தைப் பெறும். இதில் முரண்பாடு இல்லை. வேறுபாடுதான் உள்ளது. இன்னும் இந்த வேறுபாடு இளநீருக்கும், தண்ணீருக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது. இளநீர் சற்றுஇனிப்பாக இருக்கும். தண்ணீர் சுவையற்றிருக்கும். வேற்றுமை அவ்வளவே. இளநீரோடு தண்ணீர் கலந்தால் உபயோகமற்றதாகிவிடாது. இதுவும் முரண்பாடல்ல. வேற்றுமைதான். இத்தகைய வேற்றுமைகளை விவேகமிருந்தால் விலங்கிக் கொள்ளலாம். அறிவு இருந்தால் அகற்ற முடியும். ஆனால் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் உள்ள முரண்பாடு தண்ணீருக்கும் கழுநீருக்கும் உள்ளதைப் போன்றது.
(குடந்தை - பொழிவு - திராவிடர் நிலை)

» ஐயர்மார் பேசும் மொழி ஆலயங்களிலும், துரைமார்கள் பேசும் மொழி ஆட்சி அலுவலகங்களிலும் இருக்கும் நிலை வந்ததும் தாய்மொழிக்கு இடம் தொட்டில், கட்டில், சமயலிடம், தோட்டம், கழநி என்றாகி விட்டதல்லவா!
ஆரியர்கள் சிந்து நதி தீரத்திலிருந்து தக்காணம் நோக்கி வந்த போது தமிழகத்தின் செல்வம் கொழித்திருந்தது. தமிழர்கள் நெஞ்சில் நல்லெண்ணங்கள் குடி கொண்டிருந்தன என்பதுவும், ஆரியர்கள் குடியேற்றத்திற்குப் பிறகு செல்வம் குறைந்திருக்கிறது. நல்லெண்ணங்கள் மறைந்து நச்சுக் கொள்கைகள் குடிகொண்டிருக்கின்றன என்பதுவும் வரலாற்று உண்மைகள். இதை யாரும் ஒப்புக்கொள்கிறார்கள். மறுப்பதில்லை. எனவே ஆரியர்களது வேத இதிகாச கருத்துக்கள் தொடங்கியவுடன் தமிழர்களின் நினைப்பு கெட்டு, நினைப்பு கெடவே நிலையும் கெட்டிருக்கவேண்டும் என்பது என் யூகம். (பொழிவு - நிலையும் நினைப்பும்)
» ஆலயமென்பது ஆரியக் கோட்டை என்பதும், தந்திரயந்திரமென்பதும், பாமரருக்கு பலிபீடம் என்பதும், சிந்தனைச் சுதந்திரத்தை இழந்தவர் சிக்கிச் சிதையும் சிலந்திக் கூடென்பதும் அவனிக்குத் தெரியும். அதனைத் தெரிந்திருந்த தமிழரோ அதனை மறந்தனர். அது நாளை சூத்திரங்கள் என்று நம்பியும் மமதையாளரின் போக்கை மகிமை என்ற எண்ணவுமான நிலை பெற்றது கண்டு வாடினர்.
(கலிங்கத்துப்பரணி - புதினம்)

» தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எசமானனாக இல்லாமல் - உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் - நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே எங்களது தலையாயக் கொள்கை.
» எளிமைதான் தமிழனின் பண்பு, அது மட்டுமல்ல; நிலை உயர, உயர மிகமிக எளிமையாக இருப்பதுதான் - அந்த பண்பின் சிகரம்
» தமிழன் உலகில் எங்கு சென்றாலும் - தனியாகவே சென்றாலும், தனக்கென இருக்கும் பண்பை - ஆற்றலை உலகு அறிந்துகொள்ளச் செய்வான்.
» தமிழன் வாழவேண்டிய நல்வாழ்வு, தன்னை மட்டும் வாழ்வித்துக்கொள்ளக் கூடியதல்ல! தமிழன் நல்வாழ்வு வாழவேண்டுமென்பது, மற்றவர்களை வாழவைக்கவேண்டும் என்பதுதான்.
» தேசிய ஒருமைப்பாடு என்பது நல்ல இலட்சியம்தான். மதித்து நடக்கக்கூடியதுதான். ஆயினும் அதற்காக மொழித்துறையிலோ, பொருளாதாரத் துறையிலோ, ஆதிக்கம் செலுத்துவதையும், அநீதியையும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதனால்தானே மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
» அச்சம் தவிர்த்திடுக! நவநிதியேத் தந்திடினும் நத்திக் கிடந்திட இசையாதீர்! வாய்மைதனைக் காத்திடும் வன்மைதனைப் பெற்றிடுக! அதற்காக நெருப்பாற்றில் நீந்திடவும் துணிந்திடுக! யாந்தமிழர் என்பதனை மெய்பித்திடுக
                                                                        நன்றி 
.R.Sembian, Anna Peravai

வரலற்றில்செங்குந்தர் முதலியார்


திருநெல்வேலியின் வரலாறு (1 of 14)

பெயர்க்காரணம்
 
நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளிலேயே 'திருநெல்வேலி' என அழைக்கப்படுகிறது.
 
வரலாறு
 
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்ச நல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள் வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத்தெரிய வந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணர முடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும் இந்தப்புதை பொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
 
இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப் பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது. சோழர் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ் இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால், மாலிக்காப்பூர் மதுரையைச் சூறை யிட்டான்.
 
பாண்டியர்களின் சந்ததியினர் மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாக காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ் நாடே 72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன.
 
அவற்றில் குறிப்பிட்டத்தன : நாங்குனேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன் கோட்டை, நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, எட்டயபுரம். பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் அரியநாத முதலியாரும், வடமலைப்பன் பிள்ளையும் ஆவர்.
 
பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு
 
சேரன் மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீலவ பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பெளத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன. மொகலாயர் காலத்தில் கட்டப் பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது.
 
திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன் கோட்டையில் காணலாம். வீர கேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 நன்றி           nellaionlaine
செங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு,ஆரணி,காமக்கூர்,தேவிகாபுரம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

"கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.

செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

"மூன்று கம்பீர புருசர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"
"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."


அப்பப்பா! என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர் சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும், இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

18ஆம் நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து தெரியவருகிறது.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.

இரட்டைப் புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும் செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின் ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும் முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப் புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

அரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.


(பி.கு : இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில் (குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது. இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

Labels: kaikolar, muthaliyar, sengunthar, கைகோளர், கைக்கோளர், செங்குந்தம், செங்குந்தர், முதலியார்
நண்பராக இணை